search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    சென்னையில் ஜூன் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது

    2 ஆண்டுகளுக்கு பிறகு செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடி கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அ.தி.மு.க. மேலிடம் தேர்தல் கமிஷனில் கால அவகாசம் கேட்டு இருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல், உள்கட்சி தேர்தல் காரணமாக இக்கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் கடந்த 3 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    காலியாக இருந்த பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சி குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    கட்சி வளர்ச்சிக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும், கட்சி வலுப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    கட்சியில் நிலவும் உள்கட்சி மோதல் தொடர்பாகவும் ஒற்றுமையாக அனைவரும் செயல்படுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 2,500 பேரும், செயற்குழு கூட்டத்தில் 500 பேரும் சிறப்பு அழைப்பாளர்களாக 1000 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×