search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

    நாம் தமிழர் கட்சி உள்பட மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த வக்கீல் ராஜீவ்காந்தி தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார். இவரது ஏற்பாட்டின் பேரில் நாம் தமிழர் கட்சி உள்பட மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் தி.மு.க. இன்னும் 2 ஆண்டில் தி.மு.க.வின் 75ம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். 5 முறை தலைவர் கலைஞர் தலைமையில் ஆட்சியில் இருந்துள்ளோம். இப்போது 6வது முறையாக உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சியில் இருக்கிறோம்.

    தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமின்றி இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காகவும் மட்டுமின்றி அங்குள்ள எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம்.

    அந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்யும் கடமையை நாம் ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.

    மே7ந்தேதி தான் நாம் ஆட்சி பொறுப்பேற்றோம். 10 ஆண்டு, 20 ஆண்டு ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதனை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம். இன்னும் செய்யப்போகிறோம்.

    ராஜீவ்காந்தியை பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. தொலைக்காட்சிகளில் அவரது விவாதம் நடைபெறுகிறபோது விவேகமானதாகவும் கொள்கையில் இருந்து விலகி விடாத அளவுக்கும் இருக்கும்.

    அதை பார்க்கிற ஒட்டுமொத்த பொதுமக்களும் அவரை பாராட்டதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறப்பாக அவர் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

    அவரை போல இன்றைக்கு இருக்கும் இளைஞர்களும் பணியாற்றிடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் டி.செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், டாக்டர் செந்தில்குமார் எம்.பி., பூச்சி முருகன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், செய்தித்தொடர்பு இணைச்செயலாளருமான ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


    Next Story
    ×