search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் டதி பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்த காட்சி.
    X
    நாகர்கோவில் டதி பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்த காட்சி.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா மிகப்பெரிய முத்திரை பதிக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன்

    நேர்மையானவர்கள், ஏழைகள் வருங்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்குட்பட்ட டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா மக்களை நம்பி தனித்து நிற்கிறது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எல்லா இடங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழகத்தில் உள்ள நிர்வாகிகளிடம் இன்று காலை 5 முதல் 7 மணி வரை அலைபேசியில் பேசினேன். எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தமிழகத்தில் மிகப்பெரிய முத்திரை பதித்ததாக அமையும்.

    வாக்குச்சாவடிக்குள் செல்லும் யாராக இருந்தாலும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. சிலர் தாங்கள் வாக்களிப்பதை செல்போன்களில் படம் பிடித்து, வெளியே பரப்புகிறார்கள். எனவே எந்த செல்போனையும் யாரும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது. அது போல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போனை வெளியே வைத்துக்கொண்டு போகக்கூடிய வசதி இல்லாமல் இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் எல்லா மாவட்டங்களிலும் வாக்காளர்கள் செல்போன் வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்.

    தேர்தலில் பணப்பட்டு வாடா செய்வது மிகவும் வேதனையான ஒன்று. நேர்மையானவர்கள், ஏழைகள் வருங்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் காலத்தில் அல்லாமல், சாதாரண காலத்தில் இதை பெரும் இயக்கமாக எடுத்து நடத்த வேண்டும். இல்லை என்றால் பெரும் பண முதலாளிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் முன் நிற்கக்கூடிய நிலை ஏற்படும். அவர்களால் எந்த நன்மையும் வராது, அதுபெரிய நஷ்டமாகத்தான் முடியும்.

    திருமங்கலம் பர்முலா கொண்டு வந்தவர்கள் ஆளும் கட்சியினர்தான். தமிழகத்தை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றது தி.மு.க. தமிழக வாக்காளர்களை விலைபொருளாக, சந்தை பொருளாக மாற்றியது தி.மு.க.தான். தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சி பாரதிய ஜனதாவிற்கு ஏற்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் எப்படி நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இதில் யார் யாருடன் கை கோர்பார்கள் என்று தெரியாது. கன்னியாகுமரி மாவட்டமே அதற்கு எடுத்துக்காட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.கவும் சேர்ந்து பத்து வரு‌ஷமாக ஒரு பேரூராட்சியில் நிர்வாகத்தை கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க.வும், அ.தி.மு.கவும் சேர்ந்து வெற்றி பெற்றதும் உண்டு. தலைவர் தேர்தலில் குதிரை பேரம் நடப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் இங்கு வாக்காளர்களையே குதிரை ஆக்கிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×