search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

    முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். 

    அதுவே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாட்கள் எனில் கூடுதல் வருவாய் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கிடைக்கும்.

    இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அன்றைய நாள் மதுக் கடைகள் எதுவும்  செயல்படாது. அதன்படி நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.  

    இதையொட்டி  முழு ஊரடங்குக்கு முந்தைய நாளான 22-ந்தேதி (சனிக்கிழமை) டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியது. 

    மதுப்பிரியர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை வாங்கி சென்றனர்.

    சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தான் மது விற்பனை அதிகமாக நடக்கும்.  அதன்படி மாலை 4 மணியில் இருந்து இரவு  10 மணி வரை டாஸ்மாக் கடைகள் முன்பு  இளைஞர்கள், கூலி தொழிலாளர்கள், முதியவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

    அவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுடைய மது வகைகள் வேண்டி முன்டியடித்தனர். இதனால் மது விற்பனை படுஜோராக நடந்தது. 

    அந்த வகையில்  மாவட்டம்  முழுவதும்  நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.7 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  ஊரடங்கையொட்டி முன்கூட்டியே டாஸ்மாக் நிர்வாகம்  சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் டெம்போக்களில் அட்டை பெட்டிகளில்  வைத்து மது, பீர் உள்ளிட்டவைகளை அனுப்பி வைத்தது. 

    அவற்றை ஊழியர்கள்  பத்திரமாக இறக்கி கடைகளில் இருப்பு வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் குவாட்டர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மது வகைகள் சீக்கிரமாக விற்று தீர்ந்தது. இதனால் மது பிரியர்கள் கேட்ட குறிப்பிட்ட ரக மது கிடைக்கவில்லை.
    Next Story
    ×