search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துதிக்கையால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகருக்கு வளர்ப்பு யானை அபிஷேகம் செய்ததை படத்தில் காணலாம்.
    X
    துதிக்கையால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகருக்கு வளர்ப்பு யானை அபிஷேகம் செய்ததை படத்தில் காணலாம்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடிய யானைகள்

    கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தன.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் டாப்சிலிப்பில் வனத்துறை அலுவலகம் அருகில் யானை பொங்கல் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோழிகமுத்தி முகாமிலேயே யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது பீய்ச்சியடித்து அபிஷேகம் செய்தன. இதைத்தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிப்பட்டன.

    கும்கி யானையான கலீமிற்கு பட்டம் கட்டி, குடை பிடித்து முதல் மரியாதை செய்து பாகன்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து யானைகளுக்கு கரும்பு, பொங்கலை வழங்கினர்.

    பின்னர் யானைகள் துதிக்கை தூக்கியபடி பிளறின. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. யானைகள் முன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக யானை பொங்கல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் வந்தோம். ஆனால் எளிமையான முறையில் யானை பொங்கல் சிறப்பாக நடத்தப்பட்டது. மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினோம். சின்ன தம்பி, அரிசி ராஜா யானைகள் குழந்தை போன்று அமைதியாக நிற்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் யானைகளுக்கு உணவு கொடுக்க முடியாததுதான் ஏமாற்றமாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×