search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி திருக்குடை
    X
    திருப்பதி திருக்குடை

    திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஊரடங்கு காரணமாக தவிர்ப்பு

    தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
    சென்னை:

    இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆதிசே‌ஷனுக்கும், மகா விஷ்ணுவுக்கும் உள்ள தொடர்புகளை புராணங்கள் உயர்வாகச் சொல்லி இருக்கின்றன. பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாக, ஆதிசே‌ஷன் அவதரிக்கிறார். அமரும்போது சிம்மாசனம் ஆகிறார். நிற்கும்போது பாதுகையாகிறார். பாற்கடலில் துயில் கொள்ளும்போது பெருமாளின் படுக்கையாக மாறுகிறார்.

    இவையெல்லாம் திருமாலுக்காக, ஆதிசே‌ஷன் மேற்கொள்ளும் அவதாரங்கள் என்கிறார் முதலாழ்வார் மூவரில் ஒருவரான பொய்கையாழ்வார். தெய்வத்துக்குரிய மங்களப்பொருள்களில் திருக்குடையும் ஒன்று. திருமலைவாசருக்கு திருக்குடைகள் சமர்ப்பிப்பது புண்ணிய கைங்கரியங்களில் சிறந்தது.

    தமிழகத்தில் இருந்து 2 வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

    திருப்பதி கோவில்

    வரும் 10-ந்தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மீக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில், திருக்குடைகளுக்கு யாக பூஜைகள் நடக்கின்றன. பின்னர், 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    9-ந்தேதி திருச்சானூர் தாயார் கோயிலில் 2 திருக்குடைகளும், 10-ந்தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் கட்டுப்பாடு காரணமாக, மேற்கண்ட திருக்குடை ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருக்குடை கமிட்டியினருக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை.

    இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் வீட்டில் இருந்தே தரிசிக்க வசதியாக, அக்.3 மற்றும் அக்.5 ஆகிய நாட்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகள், ‘திருப்பதி குடை’ என்ற முகநூல் மற்றும் ஆர்.ஆர்.கோபால்ஜி என்ற யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடையாக பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளை தரிசிக்கலாம்.

    மேலும், இந்த ஆண்டு, திருப்பதி திருக்குடை ஆன்மீக ஊர்வலம் தவிர்க்கப்பட்ட காரணத்தால், வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை), திருப்பதி திருக்குடை கமிட்டியினர், தமிழக பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். அன்றைய தினம், “ஓம் நமோ நாராயணாய” திருநாமத்தை 1008 முறை உச்சரித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் பாரத நன்மைக்காக, சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் தர்மம் பெருகவும், மக்களிடம் பக்தி தழைப்பதற்கும், இந்து தர்மார்த்த சமிதியால் நடத்தப்படும் திருப்பதி திருக்குடை ஆன்மீக நிகழ்வுக்கு, நன்கொடைகள், உண்டியல் வசூல் கிடையாது.

    மேலும் விவரங்களுக்கு: 73730 99562, 73730 99545.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    Next Story
    ×