search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்
    X
    பொரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்

    பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமையாசிரியர்: விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீசு

    கொரோனா தொற்றால் ஆசிரியை பாதிக்கப்பட்ட பொரணி அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனுமதி பெறாமல் பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமையாசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
    வெள்ளியணை :

    கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டாக்டர்களின் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

    இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சுகாதாரத்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொரணி அரசு மேல்நிலை பள்ளிக்கு நேற்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கலெக்டர் கேட்டபோது, அவர் பள்ளிக்கு இன்று (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    மேலும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்த நிலையில், பிற ஆசிரியர்கள் எங்கே? என கலெக்டர் கேட்டபோது அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்.

    இதனைதொடர்ந்து அங்கிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தியிடம் பள்ளிக்கு விடுமுறை விட அனுமதி அளித்து உத்தரவு ஏதும் வழங்கப்பட்டதா? என கேட்டார். அப்போது அவர் இல்லை என்று கூறினார்.

    இதையடுத்து பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் தனது கவனத்துக்கு கொண்டுவராமலும், கல்வித்துறையின் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து பள்ளிக்கு விடுமுறை விட்டது ஏன்? என்பது குறித்தும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது ஏன்? என்பது குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப கேட்டுக்கொண்டார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×