search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள் திறப்பு"

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.

    ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

    தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    • பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பள்ளித் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதிக்குள் முடிகிறது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி விட்டது. அரசு பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஏப்ரல் 13-ந் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படுகிறது.


    மேலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் விரைவாக தேர்வை நடத்தி கோடை விடுமுறை அளிக்க கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வெயில் தாக்கம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. ஜூன் 2-வது வாரத்தில் அதாவது 10-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 4-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும். அரசின் உத்தரவையொட்டி இந்த முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
    • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சென்னை :

    கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

    இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • மிச்சாங் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
    • வருகிற 20-ந்தேதி, பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, வருகிற 20-ந்தேதி, பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்

    அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
    • தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    • காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடப்பட்டது. கடந்த 23-ந்தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடப்பட்டன.

    27-ந்தேதி முதல் மேலும் சில பள்ளிகள் மூடப்பட்டன. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

    காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.

    தனியார் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
    • தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்ததால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதையொட்டி கடந்த மாதம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2 மாதங்களுக்கு பிறகு பள்ளியில் தங்கள் நண்பர்களை நேரில் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் மணிப்பூரில் பயணம் மேற்கொண்டார்.
    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவான அளவே இருந்தது.

    மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொண்டார்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும்.

    வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    ×