search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்தது கண்டுபிடிப்பு- லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.7 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினர்.

    அதாவது ராஜேந்திரபாலாஜி மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். அதேவேளையில் வழக்குப்பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஹேமலதா உத்தரவு பிறப்பித்தார்.

    இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் இந்த வழக்கை விசாரித்தார்.

    இந்த அமர்வில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார்.

    அப்போது அவர், ‘ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் குறித்து அ.தி.மு.க. ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து குவித்துள்ளது தற்போது நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் மீதான புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்துவது அவசியமாகும். இதனால், மேல் விசாரணை தொடங்கி உள்ளது' என்றார்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு நீதிபதி நிர்மல்குமார் தள்ளிவைத்தார்.
    Next Story
    ×