search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    தனியார் மாணவர்கள், அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    பொருளாதாரச் சூழல்களால் தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கலாம் என்றாலும் அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

    தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், அவர்களுக்கு அடுத்துள்ள வாய்ப்பு அரசு பள்ளிகளில் சேருவது தான். ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி மாற்றுச் சான்றிதழ் பெற்று குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டுள்ளனர்.

    ஆனால், தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    கோப்புபடம்

    பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு அரசு பள்ளி சார்பிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி, இந்த வசதி குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வசதியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்.

    அவர்களிடம் கட்டணத்தை பின்னாளில் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கலாம். மொத்தத்தில் பொருளாதார நெருக்கடியால் எந்த குழந்தையின் கல்வியும் தடைபடாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×