search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    4 மாவட்டங்களில் 900 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு

    ஒரு மாதத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகரித்ததால் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இதையொட்டி டாஸ்மாக் மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் கள்ள மார்க்கெட்டில் மதுபானங்களை அதிக விலைக்கு வாங்கி குடிக்கிறார்கள்.

    மேலும் மது விற்பனை தொடங்கி உள்ள அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (14-ந்தேதி) முதல் 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் மது விற்பனை தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 900 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    சென்னையில் மட்டும் 385 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நாளை மறுநாள் முதல் திறக்கப்படுகிறது.

    டாஸ்மாக் கடை

    ஒரு மாதத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. டாஸ்மாக் கடைகள் மூலம் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கண்காணிக்க போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படும் ஒரு சில நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 2 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிற போதும் பார்களுக்கு அனுமதி இல்லை. அதனால் மதுபானங்களை வாங்கி சென்று அருந்த வேண்டிய நிலைதான் உள்ளது.

    இதற்கிடையில் மதுபானங்களின் விலையையும் உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாதாரண ரக மது வகைகள் ரூ.10-ம், உயர்தர மது வகைகளுக்கு ரூ.30 வரையும் விலை உயரும் என்று தெரிகிறது.

    பீர் வகைகள் ரூ.10 வரை அதிகரிக்கிறது. இதற்கான அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பாதிக்கப்பட்ட இந்த 1½ ஆண்டு காலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்தனர். இறந்த ஊழியர் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பும், இழப்பீடும் வழங்க வேண்டும்.

    டாஸ்மாக் பணியாளர்கள் மட்டுமின்றி இந்த பணியில் ஈடுபட்டுள்ள டிரைவர், கிளினீர்கள், குடோன் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மேற்கொள்ளும் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். இதில் பணியாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×