search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

    முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கரூர், நாகப்பட்டினம், நீலகிரி, மயிலாடுதுறையில் தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் வந்து விட்டது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது.

    இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

    ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி குறிப்பிட்ட கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தன.

    தற்போது மாநிலம் முழுவதும் தினசரி பாதிப்பு 17 ஆயிரம் என்ற அளவுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. நேற்று மொத்த பாதிப்பு 17 ஆயிரத்து 321ஆக இருந்தது.

    கோவை, சென்னை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருக்கிறது.

    முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கரூர், நாகப்பட்டினம், நீலகிரி, மயிலாடுதுறையில் தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் வந்து விட்டது.

    எனவே மாநிலத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்கலாமா? என்று அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு பிறகு நீடிக்க செய்யலாமா? அல்லது விலக்கி கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங்பேடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்தியில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆகியோருடனும் முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    ஆலோசனை மேற்கொண்டார்.


    வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முழு ஊரடங்கை அப்படியே நீடிக்கச் செய்வதா? என்று அவர்களுடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்றும் கருத்துக்களை கேட்டார்.

    நேற்று சென்னை ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது. மக்கள் வெளியே நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஊரடங்கு இல்லை என்கிற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியது. அதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கடந்த 7-ந்தேதி முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுபோக்குவரத்து தொடங்கப்படவில்லை. பஸ் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்தில் நீண்டதூரம் செல்லும் ஒரு சில சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

    அத்தியாவசிய பணியாளர்கள் பயணம் செய்யும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபற்றி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.

    இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் முழு ஊரடங்கு தொடர்பாக அடுத்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 14-ந்தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது தெரிய வரும். ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில் இப்போதைய கட்டுப்பாட்டில் இருந்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே முழு கட்டுப்பாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×