search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த 15 மண்டலத்துக்கும் அமலாக்க குழு

    சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மண்டலத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. எனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று முதல் (6-ந்தேதி) 20-ந்தேதி வரையில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

    அதன்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் டீக்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே பகல் 12 மணி வரை இயங்கின. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    இதனால் பெரும்பாலான வணிகப் பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. ஓட்டல்களில் பார்சல் சர்வீஸ் மட்டும் சமூக இடைவெளியுடன் அனுமதி வழங்கப்பட்டது.

    அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்றினர். பஸ், பயணிகள் ரெயில்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சி

    சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மண்டலத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மண்டலத்துக்கும் ஊரடங்கு அமலாக்கக் குழு அமைத்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இந்த குழுவில் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உரிமம் ஆய்வாளர் நிலையில் 2 நபர்கள், காவல் துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் நிலையில் 2 நபர்கள் மற்றும் சென்னை மாவட்ட வருவாய் துறையின் சார்பில் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழுவினர் தங்களது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    இந்த மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ், போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

    ஊரடங்கு குழுவின் வாகனத்தினையும் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சமி, துணை ஆணையாளர் (வருவாய் மற்றும் நிதி) மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×