search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 107 பேருக்கு கொரோனா- டாக்டர் உள்பட 4 பேருக்கு மீண்டும் தொற்று

    தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டி இருந்தது. மாநகர பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இன்று புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் 4 பேர் ஏற்கனவே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் ஆவர். தற்போது அவர்களுக்கு மீண்டும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த டாக்டரும் ஒருவர் ஆவார்.

    கொண்டாநகரத்தில் நேற்று போலீஸ் ஏட்டு ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    நாங்குநேரி பகுதியில் 10 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கும், சேரன்மகாதேவியில் ஒரு சிறுவன், ஒரு சிறுமிக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    பாளை, பர்கிட்மாநகர் மற்றும் தச்சநல்லூர் பகுதிகளில் தலா ஒரு தம்பதிகள் வீதம் 6 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஜநகரில் 3 பேர், காவல்கிணறில் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர், பாளையில் 18 வயது வாலிபரும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,776 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று நோய் பாதிப்பில் இருந்து 8 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15,840 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 217 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 719 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×