search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகர பஸ்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்கிய காட்சி. (இடம்- கோயம்பேடு)
    X
    சென்னை மாநகர பஸ்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்கிய காட்சி. (இடம்- கோயம்பேடு)

    தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

    கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா? என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் ஆகியவை காரணமாக தமிழகத்திலும் கொரோனா நோய் தொற்று இப்போது மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது.

    இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதையும் தாண்டி கொரோனா மிக வேகமாக பரவி விட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

    மக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவியது.

    இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கொரோனா பரிசோதனை தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் 87 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதில் 3,289 பேர் ஆண்கள், 2,152 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் அதிகபட்சமாக 1,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரத்து 863 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 33 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.

    சென்னையில் கடந்த 45 நாட்களில் கொரோனா பரவுவது 10 மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா? என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீத அளவுக்குதான் இப்போது மக்களை அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் வெளியில் காத்திருந்துதான் உள்ளே செல்ல முடிகிறது.

    அரசின் புதிய கட்டுப்பாடுகளை நோட்டீசுகளாக கடை முன்பு ஒட்டி உள்ளனர். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசையும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் கடை கடையாக விநியோகித்து வருகிறார்கள்.

    அரசு வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் 2 முறை கட்டுப்பாடுகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்று முதல் உடல் வெப்ப அளவை பரிசோதித்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே வேலை பார்க்க அனுமதிக்கிறார்கள். கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.

    அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய தற்போது அனுமதி இல்லை. கூட்டம் அதிகமாக ஏறினால் கண்டக்டர் அவர்களை அனுமதிப்பதில்லை. அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என்று கண்டிப்புடன் கூறி விடுகிறார்.

    காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி, நகை கடைகள், ஷோரூம்களிலும் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கிறார்கள்.

    அரும்பாக்கத்தில் ஒரு ஓட்டலில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு சாப்பிடுபவர்களை படத்தில் காணலாம்.

    ஓட்டல்கள், டீக்கடைகளில் மொத்தமுள்ள இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கிறார்கள். கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்றும் கட்டுப்பாடுகளை எழுதி ஒட்டியுள்ளனர்.

    கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், அருங்காட்சியகங்கள் ஆகியவைகளிலும் 50 சதவீத பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.

    சினிமா தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படிதான் இன்று தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்த்தனர்.

    ஷாப்பிங் மால்களிலும் 50 சதவீதம் பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றுக்கு 100 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்ச்சிக்கு 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அதை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

    விளையாட்டு அரங்குகள், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

    திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த இன்று முதல் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம். கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

    வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க இன்று முதல் இ.பாஸ் பெற்றுதான் தமிழ்நாட்டுக்கு வர முடியும்.

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க, பொது மக்கள் அனைவரும் அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தற்போது கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

    அரசு கொண்டு வந்துள்ள தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்து இருந்தாலும் இன்னும் சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களும் 2 வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    நோய் தொற்று அறிகுறி இருந்தால் பொதுமக்கள் தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

    இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை கண்காணிப்பதற்கு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் அவர்களுடன் இணைந்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×