search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகத்தை பார்வையிட குவிந்த பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
    X
    ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகத்தை பார்வையிட குவிந்த பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    மெரினா கடற்கரை நினைவிடத்தில் ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

    மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அவரது அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு ஜெயலலிதாவுக்கு ரூ.80 கோடி செலவில் நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டது.

    கடந்த ஜனவரி 27-ந்தேதி பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

    அப்போது அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகள் நிறைவடையவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

    எனினும், பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதால், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

    இந்த அருங்காட்சியகத்தில் நுழைந்த உடன் நேராக கண்ணில் படும்படி ஜெயலலிதாவின் ஆளுயர மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப்பருவம் முதல் ஆட்சியில் இருந்த இறுதி காலம் வரையிலான ஜெயலலிதாவின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, தேசிய தலைவர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்தபோது உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
     ஜெயலலிதா அருங்காட்சியகத்தில் இளம்பெண்கள் செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.
    மேலும், ஜெயலலிதாவின் சாதனை மைல் கற்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் உரையாடல் போன்ற தொடுதிரை அரங்குகளும் உள்ளன. ஆனால், கொரோனா காலம் என்பதால் இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோன்று, அறிவுசார் பூங்காவில், ஜெயலலிதா அரசியலில் செய்த சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை பார்த்து செல்கின்றனர். கொரோனா காலம் என்பதால், முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தெளித்த பிறகே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பொதுமக்கள் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை பார்வையிடலாம்.
    Next Story
    ×