search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    வானதியை துக்கடா அரசியல்வாதி என விமர்சனம்- கமல்ஹாசனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம்

    வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், குக்கிராமத்தில் சாதராண குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் பல தடைகளை கடந்து மிகப்பெரிய இடத்துக்கு வந்த தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கூறுகின்றனர்.
    கோவை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பா.ஜனதா வேட்பாளர் வானதியை எதிர்த்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், அவருடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக விவாதிக்குமாறு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சவால் விடுத்தார்.

    இதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கமல்ஹாசன். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் விவாதிக்க விரும்புவதாகவும், வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதியுடன் விவாதிக்க மக்கள் நீதி மய்யத்தின் மாணவரணியே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கமல்


    இதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், குக்கிராமத்தில் சாதராண குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் பல தடைகளை கடந்து மிகப்பெரிய இடத்துக்கு வந்த தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கூறுகின்றனர். இந்த விமர்சனத்தின் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா? என கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தாமஸ் வீதியில் பா. ஜனதா மாநில மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி தலைவரும், டி.வி. நடிகையுமான ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

    கோவை மாவட்ட தலைவி ஜெயதிலகா, மாநில செயற்குழு உறுப்பினர் கீதா வசந்த், மைதிலி வினோ, முன்னாள் கவுன்சிலர் தீபா, லலிதா மோகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணியினர் கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை பிடித்தவாறு, துப்பட்டா கமல்ஹாசன் என கோ‌ஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×