search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    ‘மீண்டும் ஊரடங்கு’ என்ற வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

    ‘மீண்டும் ஊரடங்கு’ என்ற வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள மார்க்கெட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் நேற்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    சென்னையில் 4 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால்தான் சென்னை பாதுகாப்பான நகரம் என சொல்லமுடியும். 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இன்னும் 3 மாத காலம் ஆகும்.

    சென்னையில் உள்ள 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தயாராக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் 5 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

    இன்னும் 3 மாத காலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றி, விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தி இறுதி கட்டத்தை எட்டிவிடலாம். சென்னையில் 158 தெருக்களில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 200 வார்டுகளில் அதிக பாதிப்பு இருக்கிற 20 வார்டுகள் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் அதிக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால், நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து எந்த எண்ணமும் இதுவரை இல்லை. யாரோ வதந்தியை கிளப்பி உள்ளனர். சென்னையில் 2-ல் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே ஊரடங்கு விதித்துதான் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இல்லை.விஞ்ஞான ரீதியான நடவடிக்கை மூலமாகவே கட்டுப்படுத்தி விடலாம். எனவே ஊரடங்குக்கு அவசியம் இல்லை. மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற வதந்தியை கிளப்பினால், காவல்துறை சைபர் செல் மூலமாக அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தல், பதுக்குதல் மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு டாஸ்மாக் சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடன் சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்து திடீரென ஆய்வு மேற்கொள்ளும். மேலும் டாஸ்மாக் கடைகளில் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள நேரங்களில் மட்டும் மதுவிற்பனை செய்யப்படுகிறதா? சில்லரை விற்பனை கடைகள் முறையாக விற்பனை கையேட்டினை பாராமரிக்கின்றனவா? என்பது குறித்தும் கண்காணிக்கும்.

    இந்த குழுவில் வட்ட கலால் அதிகாரி மாதவன் தலைமையில் போலீசார் ராமகிருஷ்ணன் (தெற்கு பகுதி), மகேந்திரபாபு (வடக்கு பகுதி), ராமகிருஷ்ணன் (கிழக்கு பகுதி) ஆகியோர் உள்ளனர். பொதுமக்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மதுபானங்கள் குறித்து 9498181663, 9498133012, 7904631637 மற்றும் 9025768637 என்ற செல்போன் எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×