search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட காட்சி.
    X
    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட காட்சி.

    கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண சூழலை அனுபவிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் வெளி மாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மூலம் கொடைக்கானலில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைக்கருத்தில் கொண்டு நேற்று முதல் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கொடைக்கானலின் நுழைவுவாயில் பகுதியாக திகழும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனைச்சாவடியில் பரிசோதனை நடந்து வருகிறது.

    வெளி மாநில, வெளி மாவட்டங்களில் இருந்து வருகிற சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும். அதுவரை வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று வட்டார மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×