search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ பணியாளர்கள் ஆர்வம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ பணியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 42). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை, அங்குள்ள டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பும், இதய ‘வால்வில்’ பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவருக்கு கடந்த 22-ந் தேதி ‘மகா தமனி’ மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ‘அயோடிக் வால்வு’ சரி செய்யும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சரஸ்வதியை நேரில் சென்று நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு செய்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.7 லட்சம் வரை செலவாகி இருக்கும். தமிழகத்தில் புதிய மருத்துவமனைகள் வந்தாலும், ஏற்கனவே இருக்கிற மருத்துவமனைகளில், முதல்-அமைச்சர், கூடுதலான வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 அல்லது அதற்கும் கீழாக தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா உயிரிழப்பு ஆரம்பத்தில் 120 என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது பூஜ்ஜியத்தை நோக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். நாளை (இன்று) 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கட்டாயம் போட வேண்டும். கடந்த வருடங்களில் சொட்டு மருந்து குழந்தைக்கு போட்டு விட்டோம் என்று இந்த வருடம் செல்லாமல் இருக்க கூடாது. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரப்பணியாளர்களுக்கு தயக்கம் இருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது. கோவேக்சினை விட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. கோவேக்சின் 3-ம் கட்ட பரிசோதனை இருந்ததால் அதை போட்டுக்கொள்ள தயக்கம் இருந்தது. அதனால்தான் சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து அதை போட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×