search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

    இந்த ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 586 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

    24-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த், அரசு ஆஸ்பத்திரி டீன், கலவரத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், தீயணைப்பு துறையினர் உள்பட மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதில் நேற்று 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இன்று காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த சம்மனை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் இன்று நேரில் ஆஜர் ஆவாரா? அல்லது வக்கீல் மூலம் அபிடவிட் தாக்கல் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், இன்று ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். பின், வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×