search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் கத்தி முனையில் நகை-பணம் கொள்ளை

    திருக்கோவிலூர் அருகே இன்று அதிகாலை வியாபாரியிடம் கத்தி முனையில் நகை மற்றும் பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 40). பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் அரும்பாக்கம் புறவழிச் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு அனைவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை மர்ம நபர்கள் 5 பேர் ஜோதி மணியின் வீட்டுக்கதவை தட்டினர். அந்த சத்தம் கேட்டு வீட்டின் முன்வராண்டாவில் தூங்கி கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்தார். பின்னர் கதவை திறந்த போது அரைக்கால் டவுசருடன் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேரும் அவரை கண்மூடி தனமாக தாக்கினர். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    அதன் பின்னர் அந்த கும்பல் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டியது. நந்தகோபாலின் அலறல் சத்தம் கேட்டு ஜோதிமணி எழுந்து வந்தார். அவரை 5 பேரும் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டி பீரோ சாவியை கேட்டனர்.

    அவரது சத்தம் கேட்டு சாந்தா வந்தார். அவரையும் அந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டியது. பின்னர் கொள்ளையர்கள் ஜோதிமணியிடம் இருந்து பீரோ சாவியை பிடுங்கினர்.

    அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை திறந்து 13 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்னர் ஜோதிமணியின் குடும்பத்தினரை வீட்டில் இருந்து வெளியே வராதவண்ணம் வெளிபக்கமாக பூட்டி விட்டு மாயமாகி விட்டனர்.

    பதறிபோன ஜோதிமணி செல்போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து கதவை திறந்து ஜோதிமணியின் குடும்பத்தினரை மீட்டனர்.

    இது குறித்து திருக்கோவிலூர் போலீசில் ஜோதிமணி புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. ராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×