search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீக்கடை ஒன்றில் நடிகை குஷ்பு டீ அருந்தி பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டியபோது எடுத்த படம்.
    X
    டீக்கடை ஒன்றில் நடிகை குஷ்பு டீ அருந்தி பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டியபோது எடுத்த படம்.

    சட்டசபை தேர்தலில் போட்டியா?- குஷ்பு பதில்

    சட்டசபை தேர்தலில் போட்டியா? என்பது குறித்து குஷ்பு பதில் அளித்தார்.
    சென்னை:

    பா.ஜ.க.வில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில மீனவர் அணி செயலாளர் கண்ணன், துணைத்தலைவர்கள் மோகன், சீனிவாசன் மற்றும் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த எனக்கு, தற்போது அதை விட குறைந்த பொறுப்பாளர் பொறுப்பு அளித்துள்ளனர் என அனைவரும் கேள்வி கேட்டனர். ஆனால் தற்போதுதான் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தேசிய அளவில் பொறுப்பில் இருந்தபோது, ஏ.சி. அறையில் உட்கார்ந்து எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வேலை மட்டும்தான் இருக்கும். பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், எதிர்கட்சி என்ற காரணத்தால் அதனை விமர்சித்தே ஆக வேண்டும். ஆனால் தற்போது மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பா.ஜ.க. மாநில தலைவருக்கு நன்றி.

    சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளது. எனவே, அனைவரும் இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், பா.ஜ.க.விற்கு மக்கள் வாக்களித்தால் என்ன பயன் இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் நாம் எடுத்து செல்ல வேண்டும்.

    சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் குஷ்பு கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்கவில்லை என்று யாரும் கூறவில்லை. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி குறித்தும், வேட்பாளர் குறித்தும் தேசிய தலைவர்கள் கூறுவார்கள். பா.ஜ.க. எங்கெல்லாம் ஜெயிக்காது என்று சொன்னார்களோ அங்கெல்லாம் ஜெயித்து காட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், அசாம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருக்கலாம், அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது. தி.மு.க.விற்கு இந்த தொகுதியில் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) இருக்கும் 25 சதவீத வாக்குகள் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. தாத்தாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற முடியாது.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். வேட்பாளராக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் என் பணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து பெசன்ட் சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் நடிகை குஷ்பு டீ குடித்தார். மேலும், அங்கு இருந்தவர்களிடம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.
    Next Story
    ×