search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎம்சி காலனியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்ற காட்சி
    X
    டிஎம்சி காலனியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்ற காட்சி

    திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் ஆகியோருக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.2,500 ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வருகிற 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு 13-ந் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தாலுகாவில் 74 ஆயிரத்து 799, தாராபுரம் தாலுகாவில் 96 ஆயிரத்து 516, காங்கேயம் தாலுகாவில் 75 ஆயிரத்து 399, மடத்துக்குளம் தாலுகாவில் 36 ஆயிரத்து 357, பல்லடம் தாலுகாவில் 74 ஆயிரத்து 291, திருப்பூர் வடக்கு தாலுகாவில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 490, திருப்பூர் தெற்கு தாலுகாவில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 495, உடுமலை தாலுகாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 189, ஊத்துக்குளி தாலுகாவில் 34 ஆயிரத்து 821 என மொத்தம் 7 லட்சத்து 48 ஆயிரத்து 357 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழ் அகதிகள் 309 பேருக்கும் என மொத்தம் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று நேற்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. முன்னதாக டோக்கன் வினியோகம் செய்யும் முறை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பு ஒவ்வொரு தாலுகாவில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட 147 ரேஷன் கடை ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு பல்லடம் ரோட்டில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முதுநிலை ஆய்வாளர் நிஷார், வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் மூலமாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இதுபோல் ஒவ்வொரு தாலுகா அளவில் நடைபெற்றது. அதன்பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடு, வீடாக சென்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனை வினியோகம் செய்தனர். அதில் ரேஷன் கடையில் எந்த தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த நேரத்தில் வழங்கப்படும் என்பது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி கணேஷ் கூறும்போது, ‘பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்வதை ஒவ்வொரு தாலுகா அளவில் துணை கலெக்டர் மேற்பார்வையிடுவார். இதுதவிர 10 கடைகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ரேஷன் கார்டுகளை பொறுத்து காலையில் 100 பேருக்கும், மதியத்திற்கு மேல் 100 பேருக்கும் சமூக இடைவெளிவிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கரும்பு 100 லோடு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவசரப்பட வேண்டாம். அனைவருக்கும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தேதிகளில் முறையாக வழங்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
    Next Story
    ×