search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.
    X
    முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்- முத்தரசன் பேட்டி

    80 வயதானவர்களுக்கு தபால் ஓட்டு முறைகேடுக்கு வழிவகுக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என தஞ்சையில் முத்தரசன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட மசோதாவையும் முழுமையாக திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 4-வது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.

    ஆனால் வஞ்சகமான முறையில் இந்த போராட்டத்தை பிளவுபடுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த போக்கை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் தமிழக முதல்-அமைச்சர் இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என கூறுவதை ஏற்க முடியாது. காவல்துறை மூலம் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏற்புடையது அல்ல. முதல்-அமைச்சர்
    எடப்பாடி பழனிசாமி
     தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் வருகிற 29-ந் தேதி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தாலும் அதையும் மீறி திட்டமிட்டபடி பேரணி-பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

    தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை இந்திய தேர்தல் பார்வையாளர்கள் குழுவினரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு என்பது முறைகேடுகள் நடக்க வழிவகை செய்யுமோ? என்ற அச்சம் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். வாக்குகளாக பயன்படுத்தி விடலாம் என பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.2,500 என அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது.

    பணத்தை மட்டுமே அ.தி.மு.க. நம்பி இருக்கிறது. மக்கள் செல்வாக்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. கமல்ஹாசன் மிக சிறந்த நடிகர். வலது சாரி, இடதுசாரி கொள்கையை தவிர வேறு கொள்கை இல்லை. ஆனால் கமல்ஹாசன் மய்யம் என்கிறார். சாலையில் மையத்தில் சென்றால் விபத்து தான் ஏற்படும். ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவர் கட்சியை ஆரம்பித்து கட்சியின் பெயர், கொள்கையை அறிவித்த பிறகு விவாதிப்போம்.

    நடிகர்கள் கட்சி தொடங்குவது பெரிய வி‌‌ஷயம் அல்ல. சிவாஜிகணேசன் கட்சியை தொடங்கி திருவையாறு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. மீதான ஊழல் புகார் குறித்து மக்கள் கவனித்து வருகிறார்கள். மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என ஒரு முடிவுடன் இருக்கிறார்கள். 
    பாஜக
    வுடன் கூட்டணி சேரும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சுப்பராயன், தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாரதி வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், எதிர்கால திட்ட அறிக்கைகள், சட்டசபை தேர்தல், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    Next Story
    ×