search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி.வீரமணி
    X
    கி.வீரமணி

    திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சந்திக்க தயார்- கி.வீரமணி அறிக்கை

    மனுதர்மத்தில் இருப்பதை திருமாவளவன் சொன்னதால் அவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடை பெற்ற இணைய கருத்தரங்கில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அக்கருத்தரங்கில் நான் உள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் பங்கு கொண்டு பேசினார்.

    அவர் மனுதர்மம் குறித்துப் பேசிய பேச்சின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

    பா.ஜனதா வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கொடுத்த மனுவில், மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    திருமாவளவன் தனது சொந்த கருத்தாக எதையும் சொல்லவில்லை. மனுதர்மத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாகத்தான் பேசி இருக்கிறார். உண்மை இவ்வாறு இருக்க, திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தினார் என்று திரிப்பது மோசடியல்லவா!

    இதே காரணங்களுக்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மனுதர்மத்தைத் தம் தோழர்களுடன் மகாராஷ்டிர மாநிலம் மகத் நகரில் 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி எரித்துள்ளார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கமும், அதே 1927-ம் ஆண்டில் குடியாத்தத்தில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிலும் மனுதர்மம் எரியூட்டப்பட்டது 1927- ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி.

    1922-ம் ஆண்டிலேயே திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே மனு தர்மத்தையும், ராமாயணத்தையும் எரிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கியதுண்டு.

    திராவிடர் கழகத்தின் சார்பில் 17.5.1981 அன்றும், 7.2.2019 அன்றும் மனு தர்மம் தமிழ்நாடெங்கும் எரிக்கப்பட்டதே.

    வழக்குத் தொடுக்கட்டும் வரவேற்கிறோம்; ஹிந்துப் புராணங்களையும், இதிகாசங்களையும், சாஸ்திர நூல்களையும் நீதிமன்றத்திலேயே பட்டாங்கமாகத் தோலுரித்துக் காட்டும் பிரச்சார வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது என்று கருதியே மகிழ்ச்சி அடைகிறோம்.

    நிஜத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை விட்டுவிட்டு, பெண்களை இழிவுபடுத்தும் அந்நூலில் உள்ள தகவல்களை எடுத்துக் கூறுவதுதான் குற்றமா?

    பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் முதல் நாள் கொடுத்த புகார்மீது மறுநாள் அவசர அவசரமாக செயல்படுவது ஏன்?

    சில ஊடகங்களில், தி.மு.க. குறைந்த அளவே அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கும் என்றும், அதுவும் அக்கட்சிகளை தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தும் என்றும் கூறி, கயிறு திரித்தனர்; கூட்டணித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதனைத் திட்டவட்டமாக மறுத்தவுடன், அந்த வாதம் ‘புஸ்வாணமானது!’

    தொல்.திருமாவளவன் மீது வழக்குப் போடப்பட்டு உள்ளதை ம.தி.மு.க., இடது சாரிகள், காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம். நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, புராண, இதிகாசங்களை தோலுரிக்கும் வாய்ப்புக் கிட்டுமா என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×