search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கோவையில் மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை

    கோவையில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை பெரிய கடை வீதி அருகே உள்ள செம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 62).

    இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான மணிகண்டன் (28) என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. அவர் மட்டும் தாயார் தனலட்சுமியுடன் வசித்து வந்தார்.

    மணிகண்டன் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றால் இரவு 8 மணிக்கு மேல் வீட்டு திரும்புவார். அதேபோல் நேற்று காலையும் மணிகண்டன் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். வீட்டில் தாயார் தனலட்சுமி தனியாக இருந்தார்.

    இரவு பணி முடிந்து மணிகண்டன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது. வீட்டில் படுக்கையறையில் தனலட்சுமி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    தாயார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த மணிகண்டன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொல்லப்பட்ட தனலட்சுமியின் உடலில் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மேலும் கொலையாளிகளுடன் அவர் கடுமையாக போராடிய அடையாளங்களும் அங்கு தென்பட்டன.

    தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது. தனலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நேற்று வீட்டுக்குள் புகுந்து அவரை கொலை செய்து இருக்கலாம், பின்னர் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனலட்சுமி வீட்டில் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் மர்ம நபர்கள் 3 பேரின் கைரேகைகள் பதிவாகி இருந்தது. அந்த கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடக்கிறது.

    மேலும் தனலட்சுமி தனியாக இருப்பது அந்த பகுதியினருக்கே அதிகம் தெரியவாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த கொலை, கொள்ளையில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர தனலட்சுமி வேறு எதாவது காரணத்துக்காக கொலை செய்யப்பட்டு, கொள்ளை நாடகம் நடத்தப்படுகிறதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் செம்பட்டி காலனி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×