search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு அந்த அளவு மழை இருக்காது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக ஓரளவு தமிழகத்தில் மழை இருக்கும். அதேபோல், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 21 சதவீதம் அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆண்டின் மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகளவு மழை கிடைக்கும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும்.

    இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?, எந்த அளவுக்கு மழை இருக்கும்? என்று தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி, நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் இயல்பான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் 3-வது வாரத்திலேயே, இந்த முறையும் தொடங்கும் என்றே வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 15-ந் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) எந்தெந்த இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங் கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×