
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறோம். இதை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 129 என்ற எண்ணிக்கையில் இருந்த இறப்பு, 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே எங்களது இலக்கு. தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 90.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண நிதிக்கு ரூ.7,322.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.