search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    நீட் தேர்வுக்கு காரணமான 2 கட்சிகளையும் மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

    நீட் தேர்வுக்கு காரணமான தி.மு.க.வையும், காங்கிரசையும் மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதே தி.மு.க. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடக்கூடாது.

    மாணவர்கள் நலனை குழிதோண்டி புதைத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். எனவே 2 கட்சிகளையும் மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    சட்டமன்றத்தில் நீட் விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

    பல முறை இதுகுறித்து பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து உள்ளார். அப்போது நானும் உடன் இருந்துள்ளேன்.

    மக்களின் உணர்வை புரிந்துகொண்டு, மத்திய அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். நிச்சயம் மத்திய அரசு அதனை செய்யும்.

    காசிமேடு மீனவர்கள் மாயமானது தொடர்பாக மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு மீனவர்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

    பர்மா, மியான்மர் நாடுகளில் தொடர்பு கொண்டபோது, மீனவர்கள் அங்கு பத்திரமாக இருப்பதாக உறுதியான தகவல் தெரிந்தது. அதேபோல் மீனவர்கள், அவர்களின் படகுகள் ஆகிய புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நம் மீனவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பத்திரமாக நம் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக 1 வாரத்தில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.


    Next Story
    ×