search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி - மருத்துவ அதிகாரி தகவல்

    கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் மூலம் 57 பேர் குணமடைந்து உள்ளதாக மருத்துவ அதிகாரி கூறினார்.
    கோவை:

    கோவையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சித்தா மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இதுவரை 106 பேர் சித்த மருந்து மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறியதாவது:-

    கோவையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் சித்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    ஆரம்பத்தில் 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பலர் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற விரும்பினர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. இதில் 57 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளவர்களுக்கு காலையில் கபசுர குடிநீர் ஒருமுறை மட்டும் வழங்கப்படுகிறது. பின்னர் தொற்றின் தன்மைக்கு ஏற்ப அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், திரிபலா சூரணம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அதிகபட்சம் 5 நாட்களில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் தற்போது சித்த மருந்து மூலம் சிகிச்சை பெற பலர் விரும்புகின்றனர்.

    தற்போது கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை அளிக்கப்படுகிறது. குறிப்பாக மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் மூச்சு விட முடியாமல் அவதிபடுகிறவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. தற்போது எங்களுக்கு கொடிசியாவில் உள்ள ‘சி’ அரங்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு 125 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×