search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
    X
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

    ஆர்.எஸ்.பாரதியை கைது செய்திருப்பதன் பின்னணி இதுதான்- மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

    கொரோனா கால ஊழல், அரசின் நிர்வாக தோல்வி ஆகியவற்றை மூடி மறைக்கவே ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்
    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி.யை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவர் கைது  செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எடப்பாடி போன்றவர்களின் சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசுதட்டி எடுத்து அதிகாலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருக்கிறார்.

    அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஆர்எஸ் பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். முதலமைச்சரின் நெடுஞ்சாலைத் துறையில் கொரோனா கால டெண்டர் ஊழல் மீது விரிவான புகாரை ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறார்.

    கொரோனா கால ஊழல், கொரோனா தோல்வி ஆகியவற்றை மூடி மறைக்க குறிப்பாக, முதலமைச்சர் தனது ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார்.

    நள்ளிரவு கைது நாடகங்களை பார்த்தெல்லாம் திமுக மிரளாது; நடுங்காது. இந்த மாபெரும் மக்கள் இயக்கம், எடப்பாடி போன்றவர்களின் சலசலப்புகளுக்கு என்றைக்கும் அஞ்சாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×