search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பயன்பாடு
    X
    பிளாஸ்டிக் பயன்பாடு

    சென்னையில் பிளாஸ்டிக் பயன்பாடு 50 சதவீதம் அதிகரிப்பு

    ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

    சென்னையிலும் மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

    இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது.

    கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பொதுமக்கள் வீடுகளில் இருந்தே பைகளை கொண்டு சென்றனர். உணவகங்களில் சாப்பிடுவதற்கும், பார்சலுக்கு பயன்படும் பிளாஸ்டிக் பேப்பர்களுக்கு பதிலாக பாக்கு மட்டைகளால் தயாரான தட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பல ஓட்டல்களில் வாழை இலைகளையும் பயன்படுத்தினர்.

    ஒரு சில உணவகங்களில் பார்சல் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்தே பாத்திரங்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தன.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டதால் துணி பைகளுக்கு மவுசு கூடியது. ஜவுளிகள் மற்றும் வணிக வளாகங்களில் 5 ரூபாயில் இருந்தே துணி பைகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

    அதே நேரத்தில் இந்த தடையை மீறி மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை மறைத்து வைத்து வியாபாரமும் செய்து வந்தனர்.

    இது தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரம் கிலோ டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாநிலம் முழுவதுமே இதுபோன்று பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிரடி வேட்டை தீவிரமானது. குறிப்பாக சுற்றுலா தலங்களில் கண்காணிப்பு அதிகமானது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு 80 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் பார்சல்கள் மட்டுமே வாங்கி செல்லலாம் என்றும் அதிரடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன் காரணமாக ஓட்டல்களில் உணவுகளை பார்சல் கட்டுவதற்கும் அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கினர்.

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடிய இருக்கும் நிலையில் சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்ற சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வியாபாரிகளை அதிகாரிகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

    இதனால் கடந்த ஒரு மாதத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, “பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவித்ததும் அதை முழுமையாக கடைபிடித்து வந்தோம். தற்போதைய சூழ்நிலையில் பார்சலுக்கு வேறு எந்த பொருட்களும் கிடைப்பது அரிதாக உள்ளது.

    இதனால் கடைகளில் ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

    ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “உணவுகளை பார்சல் வாங்க வரும்போது வீட்டில் இருந்தே பாத்திரங்களை கொண்டுவர வேண்டும் என்றே பொதுமக்களிடம் இப்போதும் அறிவுறுத்தி வருகிறோம். இருப்பினும் பலர் வெறும் கையுடன் வருவதால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டி உள்ளது” என்று தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் பரவல் அடங்கிய பிறகே பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீது அதிகாரிகள் மீண்டும் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×