search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றியது ஏன்? ரெயில்வே விளக்கம்

    ரெயில் பெட்டிகளை கொரோனா தனி வார்டாக மாற்றியது ஏன் என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்க 500 ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் முனுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே ரெயில் பெட்டிகள், பணிமனைகள் போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், ரெயில் பெட்டிகளை கொரோனா தனி வார்டாக மாற்றக்கூடாது என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரித்தார். அப்போது தெற்கு ரெயில்வே சார்பில் ஆஜரான வக்கீல், ‘தெற்கு ரெயில்வே பெட்டிகள் ஆஸ்பத்திரிகளாக மாற்றவில்லை. தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்கள் மத்தியில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் இல்லாதபட்சத்தில் மட்டுமே, ரெயில் பெட்டிகள் தனி வார்டுகளாக பயன்படுத்தப்படும். ஆஸ்பத்திரி இல்லாத கிராமங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அங்கு அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்படும். அங்கு முதற்கட்ட தொற்று அறிகுறி உள்ளவர்கள் மட்டும், இந்த பெட்டிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்’ என்று கூறினார்.

    இதையடுத்து, இந்த வழக்கில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×