search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம் - ஸ்டாலின்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அரசியல் கட்சிகள், சேவை அமைப்புகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பலரும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தும் வார்டுக்கு பயன்படுத்தலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது குறித்து தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தேவையான வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க. தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும், உதவிகளையும், அறம் சார்ந்த முக்கிய கடமையாக எண்ணி பணி செய்து வருவதை அனைவரும் அறிவர்.

    அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் இருக்கும் “கலைஞர் அரங்கத்தை”, கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அரசு சார்பில் “கலைஞர் அரங்கத்தை” பயன்படுத்தி, உரிய ஏற்பாடுகளை செய்யவரும் அதிகாரிகளுக்கு, தி.மு.க.வின் சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் எழுதிய இந்த கடிதத்தை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று காலை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாசை நேரில் சந்தித்து அளித்தனர்.

    மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×