search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை- விஜயபாஸ்கர் பேட்டி

    தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரையில் 72 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் என்ஜினீயர் ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் வந்த உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் 27 பேருக்கும் ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

    மேலும் நேபாளம் சென்று திரும்பிய ரெயில்வே ஊழியர் பகதூருக்கு (59) கொரோனா அறிகுறி இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுவரை நடத்திய பரிசோதனை முடிவில் 69 பேருக்கு பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது தவிர 8 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 பேரின் ரத்த முடிவு நாளை தெரியவரும். அமெரிக்காவில் இருந்து வந்த 15 வயது சிறுவன் இன்று மாலை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

    கொரோனா வைரஸ் குறித்து பீதி ஏற்படுத்த வேண்டாம். இதனை தடுக்க தேவையான அளவு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் கூடுதலாக படுக்கைகள் கேட்டு இருக்கிறோம்.

    இது தவிர சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரின் வெளிப்பகுதியில் சிகிச்சைக்கான மையங்களும் தயாராக இருக்கின்றன. பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண சோப்பை கொண்டு கைகழுவினால் போதும். சேனிடைசர் வேண்டும் என்பது இல்லை.

    புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×