search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X
    அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தமிழக மக்கள் சிறப்பாக வாழ பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா- கடம்பூர் ராஜூ பேச்சு

    தமிழக மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வாழ பல திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் தங்கம் நடுநிலைப்பள்ளியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கல்விக்குழும தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வாழ வேண்டும். குறிப்பாக கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் எந்த வகையிலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.

    தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா தான். அவர் தனது பிறந்தநாளை சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் விழாவாகவே நடத்தி வந்தார்.

    அவரது திட்டங்களை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. அதிக அளவில் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இங்கு மருத்துவ முகாம் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், ராஜலட்சுமி கல்வி குழும முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்செந்தூரில் நடந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணையும், ஆலந்தலையில் கடல்அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தில் 4வது கட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அறிவித்தார். இதுபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 80 சதவீதம் பணிகளை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உள்ளார். 20 சதவீதம் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டப்பணிகளும் விரைவில் தொடங்கும். அதற்கான அரசாணையை முதல்அமைச்சர் வெளியிடுவார். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம், அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    தூத்துக்குடியில் முறையான அனுமதி பெற்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் முழுஉருவ வெண்கலச்சிலை விரைவில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×