search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    பெரியார் பற்றி பேசியதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம்: பிரேமலதா விஜயகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி இப்போது பேசி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் பற்றி பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
    சென்னை :

    திருவள்ளூரில் பழமைவாய்ந்த வீரராகவ பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் குளத்துக்கு சென்றார். அப்போது திடீரென படிக்கட்டில் கால் வழுக்கி தண்ணீரில் விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை பிடித்து குளத்தின் படிக்கட்டில் அமர வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தை அமாவாசையை முன்னிட்டு தரிசனம் செய்ய வந்தேன். பெரியார் யாரென இந்த உலகத்திற்கு நன்கு தெரியும். நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி இப்போது பேசி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் பற்றி பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பெரியார் பெண்களுக்காக புரட்சிகரமாக பல கருத்துகளை சொல்லி சரித்திரம் படைத்துள்ளார்.

    ரஜினிகாந்த்

    அவரைப்பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. துக்ளக் விழாவிற்கு சென்ற ரஜினிகாந்த் அந்த பத்திரிகையை பற்றி பேசியிருக்க வேண்டும். பெரியார் பற்றி பேசி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். யாரோ அவரை தவறாக வழி நடத்துகிறார்கள் என நினைக்கிறேன். இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் அவர் தவிர்க்க வேண்டும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை, பாதுகாப்பான வாழ்க்கை கொண்டு வாழ இச்சட்டம் உதவும் என கிராமங்கள் வரை மத்திய அரசும், மாநில அரசும் தெளிவாக புரியவைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள். தனியார் பால் விலை உயர்வால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தே.மு.தி.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×