search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    மறக்க வேண்டியதை ரஜினி நினைவூட்டியது ஏன்? வைகோ கேள்வி

    ரஜினிகாந்த் மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இப்போது நினைவூட்டுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தந்தை பெரியார் ‘ஒரு சகாப்தம்’ என்று புகழ்ந்த பெரியாரின் தலைமாணாக்கர் பேரறிஞர் அண்ணா, “பெரியார் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

    அக்கிரமம் எங்கு கண்டாலும், எந்த வழியிலே காணப்படினும் எத்தனை பக்கபலத்துடன் வந்திடினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்கியது இல்லை” என்று பழமை இருள் அகற்றிப் புத்தொளி கொடுக்க வந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை புகழ்ந்துரைத்தார்.

    “இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து முதல் முதலாக வைக்கத்தில் போராடி வெற்றி கண்ட ‘வைக்கம் வீரர்’ பெரியாரின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதால்தான் மகாராஷ்டிர மாநிலத்தில் கோயில் நுழையும் போராட்டத்தைத் தான் நடத்த முடிந்தது” என்று உரக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர் என்பது வரலாறு.

    சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் பெரியார். பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர் விடுதலையைச் சாதித்தவர் பெரியார்.

    அந்திமக்காலம் நெருங்கிய நிலையிலும், சென்னை தியாகராய நகரில் டிசம்பர் 19, 1973-ல் ஆற்றிய இறுதிப் பேருரையில் தமிழின விடுதலைக்காக டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டவர் தந்தை பெரியார்.

    தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கின்ற தந்தை பெரியார் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துக்களை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கின்றார்.

    ரஜினிகாந்த்

    அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார்.

    மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!

    தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்?

    எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே! தொடங்கி வைத்தது ரஜினிகாந்த். அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்!

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    Next Story
    ×