search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவைக்கு பஸ்கள் செல்லாததால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் நிற்கும் தனியார் பஸ்கள்.
    X
    புதுவைக்கு பஸ்கள் செல்லாததால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் நிற்கும் தனியார் பஸ்கள்.

    நாடு தழுவிய வேலை நிறுத்தம்- விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்

    மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்கு செல்லும் தனியார் பஸ்கள் அனைத்து நிறுத்தப்பட்டன.

    விழுப்புரம்:

    மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் இருந்து புதுவை மாநிலத்திற்கு தினமும் ஏராளமான அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் புதுவையில் பந்த் நடைபெறுவதால் விழுப்புரத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்கு செல்லும் தனியார் பஸ்கள் அனைத்து நிறுத்தப்பட்டன. அதுபோல் அரசு பஸ்களும் காலை 9 வரை இயக்கப்பட வில்லை பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு ஒரு சில அரசு பஸ்கள் புதுவைக்கு இயக்கப்பட்டன. அவைகள் 2 மணிநேரத்திற்கு ஒவ்வொரு பஸ்சாக அனுப்பி வைக்கப்பட்டன. அதில் பயணிகள் முண்டியடித்து ஏறி சென்றனர்.

    விழுப்புரம் பஸ்நிலையத்தில் தனியார் பஸ்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

    விழுப்புரம் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானமாணவ -மாணவிகள் புதுவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்று பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் இரு சக்கர வாகனங்களில் கல்லூரிக்கு சென்றனர்.

    புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு தினமும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு செல்வது வழக்கம்.

    பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வேன் மற்றும் கார்களில் அவர்கள் சென்றனர். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவதி அடைந்த பயணிகள் விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு இயக்கப்படும் யுனிட் ரெயிலில் பயணம் செய்தனர். இதனால் அதில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    கடலூரில் இருந்து தினமும் புதுவை மாநிலத்துக்கு தினமும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தினமும் ஆயிரக்கனக்கானவர்கள் கடலூரில் இருந்து கன்னிக்கோவில், அரியாங்குப்பம், மற்றும் புதுவை மாநிலத்துக்கு சென்று வந்தனர்.

    இன்று புதுவை மாநிலத்தில் பந்த் நடைபெற்றதால் கடலூரில் இருந்து புதுவைக்கு செல்லும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    அதுபோல் காலையில் புதுவை செல்லும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு ஒரு சில அரசு பஸ்கள் கடலூரில் இருந்து புதுவைக்கு இயக்கப்பட்டன.

    அதில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுவைக்கு பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பயணிகள் ஷேர் ஆட்டோகளில் பயணம் செய்தனர். அனைத்து ஷேர் ஆட்டோக்களிலும் முண்டியத்து கொண்டு கன்னிக்கோவில், அரியாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

    மேலும் கடலூரில் இருந்து புதுவை வழியாக சென்னை செல்லும் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக சென்னை செல்லும் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×