search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உள்ளாட்சி பதவிகள் ஏலம் - 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் எடுத்தது தொடர்பாக 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 4,077 பதவிகள் உள்ள நிலையில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 486 பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனால் மீதியுள்ள 3,587 பதவிகளுக்கு 27 மற்றும் 30-ந் தேதி 2 கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தம் 11,870 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் திருச்சியில் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வலையூர் ஊராட்சி தலைவர் பதவி மற்றும் துணைத்தலைவர் பதவி அதற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி ஆகியவை பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜேந்திரனிடம் புகார் கூறினர்.

    அதில் வலையூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ரெங்கராஜ் என்பவர் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். துணைத் தலைவர் பதவியை ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்திற்கு மற்றொரு பிரமுகர் எடுத்துள்ளார். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியை அப்பகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் கணவர் முருகன் என்பவர் ரூ.16 லட்சத்திற்கும் ஏலம் எடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

    எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சிவராசு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அப்பகுதியில் கோவில் கட்டப்பட உள்ளது. ஊர் கட்டுப்பாட்டை மீறி யாரும் செயல்பட்டால் அவர்களை ஊரைவிட்டு விலக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது,

    இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 171ஏ, 171பி ஆகிய பிரிவுகளில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார்.

    உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தல், கையூட்டு அளிக்க முயற்சித்தல், தேர்தல் விதிமுறைகளை மீறி நடத்தல் ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்ற பதிவேட்டில் யாருடைய பெயரும் இடம் பெறவில்லை. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    Next Story
    ×