search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை விற்க வந்த தம்பதி மற்றும் புரோக்கர்கள் ஆகி்யோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த காட்சி
    X
    குழந்தையை விற்க வந்த தம்பதி மற்றும் புரோக்கர்கள் ஆகி்யோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த காட்சி

    கோவை கருமத்தம்பட்டியில் ஆண் குழந்தையை விற்க முயன்ற 5 பேர் கும்பல் சிக்கியது - பரபரப்பு தகவல்

    கோவை கருமத்தம்பட்டியில் ஆண் குழந்தையை விற்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மதுக்கரையை சேர்ந்தவர் ஜாகீர். ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு தெரிந்த தம்பதிக்கு குழந்தை தேவை என குழந்தை விற்பனை செய்யும் ஒரு கும்பலை தொடர்பு கொண்டார்.

    இந்த நிலையில் ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஹசீனா மற்றும் அவரது தோழி கல்யாணி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களை தொடர்பு கொண்ட ஆட்டோ டிரைவர் ஜாகீர் தனக்கு குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஆண் குழந்தை வேண்டுமா? பெண் குழந்தை வேண்டுமா? என்று கேட்டனர். ஆட்டோ டிரைவர் ஜாகீர் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி என்றார். இதையடுத்து ஹசீனா மற்றும் கல்யாணி ஆகியோர் தங்களிடம் ஒரு குழந்தை இருப்பதாகவும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் குழந்தை தருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து ஜாகீர் குழந்தைக்காக ரூ.2 லட்சத்தை ஹசீனாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஹசீனா, கல்யாணி ஆகியோர் மதுரையை சேர்ந்த கண்ணன்- ஜோதி என்ற தம்பதியினரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு பிறந்த 40 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பதாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விற்க சம்மதித்தனர். இதையடுத்து ஹசீனா, கல்யாணி ஆகியோர் ஆண் குழந்தையுடன் கண்ணன்-ஜோதியை நேற்று கோவை கருமத்தம்பட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ஜாகீரை தொடர்பு கொண்டு குழந்தை ரெடியாக இருக்கிறது. நீங்கள் கருமத்தம்பட்டிக்கு வாருங்கள் என்றனர்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் ஜாகீர் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் ஆண் குழந்தையை காட்டினர். உடனே ஜாகீர் குழந்தையை கேட்டார். ஆனால் அவர்கள் இங்கு கொடுக்க மாட்டோம். மாலை சூலூர் பகுதிக்கு வாருங்கள். அங்கு வைத்து குழந்தையை தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரவு நேரமானதும் இந்த கும்பல் குழந்தையுடன் சூலூர் பகுதியில் காத்திருந்தனர்.

    அப்போது ஆட்டோ டிரைவர் ஜாகீர் அங்கு வந்தார். அவர் குழந்தையை கேட்டார். ஆனால் ஹசீனா மற்றும் கல்யாணி குழந்தையை தர மறுத்தனர். அப்போது ஜாகீர் நீங்கள் கேட்ட ரூ.2 லட்சத்தை கொடுத்துவிட்டேன். ஏன் குழந்தை தர மறுக்கிறீர்கள் என்றார். அதற்கு ஹசீனா ரூ.2 லட்சத்துக்கு பெண் குழந்தை தான் கிடைக்கும். தற்போது ஆண் குழந்தை இருப்பதால் கூடுதலாக பணம் தந்ததால்தான் குழந்தையை தருவோம் என்றார். இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. 3 பேரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது குழந்தையை விற்பதற்காக கொண்டு வந்தபோது தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஹசீனா, கல்யாணி மற்றும் ஆட்டோ டிரைவர் ஜாகீர், குழந்தையின் பெற்றோர் கண்ணன், ஜோதி ஆகியோரை கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் குழந்தையை விற்க வந்த மதுரையை சேர்ந்த கண்ணன்- ஜோதி தம்பதியினர் ஏற்கனவே தங்களது முதல் குழந்தையை இது போன்று விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த கும்பல் யாருக்கு குழந்தையை விற்க கொண்டு வந்தார்கள். இதே போன்று கோவையில் வேறு யாருக்காவது குழந்தைகளை விற்பனை செய்து உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×