search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    2021-ல் நடைபெறும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    காரியாபட்டி:

    உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    காரியாபட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எடப்பாடியார் நல்லாட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மக்களின் பேராதரவை பெற்ற இயக்கம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சியை கைப்பற்றினால் தான் மக்கள் தொண்டாற்ற முடியும். உள்ளாட்சி தேர்ததலில் போட்டியிட தி.மு.க.வினர் வேட்பாளர்களை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒரு பதவிக்கு 3 பேர், 5 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டுமே சீட் கொடுக்க முடியும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளவர்களை பரிந்துரை செய்து எனக்கு கொடுங்கள்.

    அவரை வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்கும். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முடிந்தவரை பேசி நமது கட்சி அனுதாபி ஒருவரை நிறுத்த முயற்சி செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். காரியாபட்டி பகுதியில் தி.மு.க. என்ற கட்சியே இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து போனவர்கள் தற்போது இணைந்துள்ளனர். இனி அ.தி.மு.க. மட்டுமே ஆள வேண்டும். தி.மு.க.வின் பொய் பிரசாரங்கள் இனி மக்கள் மத்தியில் எடுபடாது.

    விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். 2021 தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.

    வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பொதுதேர்தலில் அ.தி.மு.க.வே வெல்லும். தொடர்ந்து ஆட்சியில் அ.தி.மு.க.வே இருக்கும்.

    அ.தி.மு.க.வை எந்த காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது. இந்த கட்சி மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை. புரட்சித்தலைவர் என்ற புனிதனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். ஒரு சாதாரண நகர கழக செயலாளராக இருந்த நான் இன்று அமைச்சராக உள்ளேன். கூட்டத்தில் கடைசியாக நின்று கட்சி கூட்டங்களில் கலந்து கொண்ட நான் இன்று அமைச்சராக வந்து உங்கள் முன் பேசுகிறேன். இது அ.தி.மு.க.வில் மட்டுமே சாத்தியம். சாதாரண தொண்டனைக்கூட சரித்தரித்தில் இடம்பெறச் செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×