search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    ஐஐடி மாணவி தற்கொலை- நேர்மையான விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமா தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

    சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தன் மகளை மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளதன் மூலம் நமது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. 

    தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும், மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும், துடிப்பும்,  பாத்திமாவின் உயிரிழப்பிலும் ஏற்படுகிறது.

    மாநில அரசு இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 

    சென்னை ஐஐடி

    சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது இது புதிதல்ல. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐஐடி இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது

    கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×