search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    குன்றத்தூர் அருகே ஆட்டோ ரேஸ்- மெக்கானிக் பலி

    குன்றத்தூர் அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்ட மெக்கானிக் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பூந்தமல்லி:

    வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). ஆட்டோ மெக்கானிக். நேற்று காலை அவரை உடலில் பலத்த காயத்துடன் அவரது நண்பர்கள் குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரபாகரன் காயம் அடைந்ததாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விபத்து நடந்த இடம் குறித்து பிரபாகரனின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ ரேசில் ஏற்பட்ட விபத்தில் பிரபாகரன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    பிரபாகரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டு உள்ளனர்.

    அப்போது அவர்களை பின்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் சென்றதாக தெரிகிறது.

    ஆட்டோ ரேசில் ஈடுபட்ட பிரபாகரன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் மீது மோதி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் உயிரிழந்து விட்டார்.

    விபத்துக்குள்ளான லாரி டிரைவரிடம் பிரபாகரனின் நண்பர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆட்டோ ரேசில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆட்டோ ரேசின் போது பல லட்சம் வரை பணம் கட்டி இருக்கிறார்கள். இதில் ஈடுபட்டது யார்-யார்? என்ற விபரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    வழக்கமாக மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை மற்றும் மீஞ்சூர் - தாம்பரம் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் மற்றும் ஆட்டோ ரேஸ் நடந்து வந்தன.

    ரோந்து போலீசாரின் கடும் நடவடிக்கைக்கு பின்னர் ரேஸ் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் ரேஸ் தொடங்கி இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×