search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரவாயல் சுங்கச்சாவடியில் மோதல்- தேமுதிக நிர்வாகி மீது தாக்குதல்

    மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் தே.மு.தி.க. நிர்வாகியை தாக்கிய தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற ஆரோக்ய ரவி (வயது 42). சொந்தமாக பேக்கரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தே.மு.தி.க. வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக உள்ளார்.

    ரவி நேற்று தனது காரில் அம்பத்தூர் சென்று விட்டு மாலை 5 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் மதுரவாயல் சுங்கச்சாவடியில் வரிசையில் காத்து நின்றார்.

    அப்போது ரவி காரின் பின்னால் புதுச்சேரி பதிவு எண் கொண்ட மற்றொரு காரில் இருந்த நபர் “ஹாரன்” அடித்தார். உடனடியாக ரவி ஏன் “ஹாரன்” அடிக்கிறீர்கள் முன்னால் நிற்கும் வாகனம் சென்றால் தான் போக முடியும் என்று கூறினார்.

    மீண்டும் காரில் இருந்த நபர் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பின்னால் காரில் இருந்த நபர் இறங்கி வந்து ரவியின் முகத்தில் சரமாரியாக குத்தினார். பின்னர் காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.

    இதில் வலது கண் புருவத்தின் மேல் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த ரவி அலறித்துடித்தார். இந்த மோதல் சம்பவம் காரணமாக சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரவி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் ரவியை தாக்கியது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பழனிக்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×