search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளுவர் சிலை
    X
    திருவள்ளுவர் சிலை

    பா.ஜனதா அலுவலகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு

    சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி தாய்லாந்து சென்றபோது அந்த நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.

    இந்த நிலையில் தமிழக பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ ‘பக்கத்தில் காவி உடை, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்த திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. இதை விமர்சனம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் பொதுவானவர் அவருக்கு மத அடையாளம் கொடுப்பதா?’ என்று கருத்து வெளியிட்டார்.

    இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். திருவள்ளுவர் விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தஞ்சை அருகே வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் அந்த சிலை சுத்தப்படுத்தப்பட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து பூஜை செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

    ‘திருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் சிலைக்கு திருநீறு பூசி, விரும்பிய உடையுடன் வழிபட பா.ஜனதாவுக்கு உரிமை உண்டு. இதை தி.மு.க. உள்பட யாரும் தடுக்க முடியாது. திருவள்ளுவர், ஆத்திகர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. அவர் உலகம் முழுவதும் உள்ள மனித குலத்துக்கு சொந்தமானவர்’ என்று பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் முக்கிய தலைவர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பல்வேறு இடங்களில் பா.ஜனதா சார்பில் திருவள்ளுவர் படத்தை வைத்து மரியாதை செலுத்துவது, பொதுமக்களுக்கு பாக்கெட் அளவிலான வள்ளுவர் படங்களை வினியோகம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முரளிதரராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இதில் கட்சியின் மூத்த தலைவர் சிவ.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கட்சியின் நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருவள்ளுவர் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் பா.ஜனதாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாஜக

    சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருவள்ளுவர் சிலை வைப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கமலாலயத்தில் இருந்த வள்ளுவர் சிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்த சிலைக்கு காவி உடை, திருநீறு அடையாளத்துடன் வண்ணம் தீட்டப்படுகிறது.

    இந்த சிலை 3 வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண்விஜய் சென்னை வந்தபோது வாங்கப்பட்டது.

    இந்த சிலை கமலாலயத்தின் முகப்பில் நிரந்தரமாக வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×