search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: பட்டாசு வெடிக்க- இனிப்பு வழங்க தடை

    அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இதுதொடர்பான வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ராம்லல்லா, சன்னி வக்பு வாரியம் நிர்மோகி அகாரா ஆகிய 3 அமைப்புகளும் சர்ச்சைக்குரிய நிலத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 16-ந்தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பே அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

    எனவே அதற்குள் தீர்ப்பை வெளியிட நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி வருகிற 13-ந்தேதி அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு காரணமாக நாட்டின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி முக்தார் அபாஸ்நக்வி தலைமையில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடை பெற்றது. அதில் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும்போது மேற் கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    எந்தவிதமான உணர்ச்சி களுக்கு இடம்கொடுக்காமல் இரு தரப்பினரும் அமைதி காப்பது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது அது தொடர்பாக எந்தவிதமான விமர்சனங்களையும் யாரும் வெளியிடக்கூடாது. ஆதரவாகவோ, எதிர்ப்பு தெரிவித்தோ எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று இந்தியா முழுவதும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதேநேரத்தில் அயோத்தி தீர்ப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் யாரும் செயல்படக் கூடாது. தீர்ப்பு வெளியாகும் நாளை துக்க நாளாக அணுசரிக்க கூடாது என்றும் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. துண்டுப்பிரசுரங்கள், பேனர்கள் எதையும் தீர்ப்பை விமர்சித்தோ, பாராட்டியோ வைக்க கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக சமூக வலை தளங்களில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக யாரும் விமர்சிக்க கூடாது என்றும் போலீஸ் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

    சென்னை முதல் குமரி வரை அனைத்து போலீஸ் சுப்பிரண்டுகள், கமி‌ஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் உயர் அதிகாரிகள் மேற்கண்ட கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர். இதனை அந்தந்த காவல் நிலைய இன்ஸ் பெக்டர்கள் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர்கள் தினகரன், பிரேமானந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வை யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாளில் (10-ந்தேதி) இருந்து போலீசாருக்கு விடுமுறை கிடையாது என்று டி.ஜி.பி.திரிபாதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதனை போலீஸ் அதிகாரிகள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் போலீசார் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் இருப்பவர்கள் பணிக்கு திரும்பவும் உத்தர விடப்பட்டுள்ளது.

    அயோத்தி இறுதி தீர்ப்பு வெளியாக இருப்பதாக் கூறப்படும் 13-ந்தேதிக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் போலீசார் இன்றுமுதல் தங்களது பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர். ரோந்து பணியின் போது பொதுமக்களிடம் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    டி.ஜி.பி. திரிபாதி

    சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி கோவை சென்று பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    சென்னையில் மசூதி நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி உள்ளனர். அப்போது போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதன்மூலம் அயோத்தி இறுதி தீர்ப்பு நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×