search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    சென்னையில் மழை - ஏரிகளில் 6 மாதத்துக்கு தேவையான குடி தண்ணீர் கிடைத்தது

    பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் உள்ள நீரை வைத்து சென்னைக்கு 6 மாதத்துக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகள் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இதுவரை வறண்டு கிடந்த ஏரிகளில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பர் 25-ந்தேதி முதல் தண்ணீர் வருகிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து லிங்க்கால் வாய் மூலம் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 730 கன அடி தண்ணீர் திறக்கபட்டு உள்ளது. இதேபோல் பேபி கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 25 கன அடி அனுப்பப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 1648 மில்லியன் கனஅடி (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 233 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழல் ஏரியில் 932 மி.கனஅடி (3300 மி.கன அடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 169 மி.கனஅடி (3645 மி.கனஅடி), வீராணம் ஏரியில் 1044 மி.கனஅடியும் (1465 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது. குடிநீர் வழங்கும் இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 12 ஆயிரத்து 722 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது மொத்தம் 4026 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் 6 மாதத்துக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

    தொடர்மழை மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து சென்னையில் குடிநீருக்கு தண்ணீர் சப்ளை 525 மில்லியன் லிட்டரில் இருந்து 650 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் லாரிகளில் தண்ணீர் சப்ளையும் 12 ஆயிரத்து 300 டிரிப்புகளில் இருந்து 7 ஆயிரத்து 700 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×