search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

    உடுமலை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தான். மின்விளக்கு எரியாததால் விபத்து நடந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் தமிழ் மணி. இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஹேமமாலினி (வயது9), என்ற மகளும், லிசாந்த் பிரபு(3), என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று சரோஜினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உடுமலை வந்தார். பின்னர் உடுமலையில் தனது தந்தை தண்டபாணியிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு கேத்தனூர் சென்றுவிட்டார். தண்டபாணி மடத்துக்குளம் அருகே உள்ள போத்தநாயக்கனூரில் வசித்து வருகிறார்.

    இதையடுத்து தண்டபாணி தனது பேரக்குழந்தைகளுடன் உடுமலையில் இருந்து மடத்துக்குளத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். பின்னர் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நரசீங்கபுரம் பிரிவு வந்தததும் தண்டபாணி தனது பேரக்குழந்தைகளுடன் பஸ்சில் இருந்து இறங்கினார்.

    தனது ஊருக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக உடுமலையை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் குழந்தைகள் மீது மோதியது.

    இதில் சிறுவன் லிசாந்த் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹேமமாலினி லேசான காயம் அடைந்தார்.

    இதை பார்த்த தண்டபாணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் 2 பேரும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அங்கு லிசாந்த் பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தண்டபாணி மடத்துக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராஜ கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் நீண்ட நாட்களாகவே மின் விளக்கு எரியவில்லை. இதனால் சாலையில் வரும் எந்த வாகனங்களும் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தண்டபாணி தனது பேரக்குழந்தைகளுடன் பஸ்சை விட்டு இறங்கியபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

    எனவே விரைந்து இந்த பகுதியில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×